Saturday, November 28, 2009

கேள்வி பதில்


வாழ்க்கைக்கான கல்வி வகுப்பறைகளுக்கு வெளியே தான் இருக்கிறது என்பார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இருந்தும் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

ஒவ்வொரு அனுபவத்தின் பின்னாலும் நமக்கான பாடம் ஒன்று அங்கு மறைந்திருக்கிறது.

இந்த உலகில் பிறந்திருக்கிற சகல மனித உயிர்களுக்கும் சூழல்களை, சமூகத்தை,பிறப்பிடத்தை,பரம்பரை அலகுகளை நிபந்தனையாகக் கொண்டு வெற்றுத் தாள்களும் பேனாவும் தரப்பட்டிருக்கின்றது.நம் வாழ்க்கையை காலப் பேனாவால் நம் மனதில் எழுதிச் செல்கிறோம்.எங்கள் வாழ்க்கையை நாங்கள் எழுதி இருக்கிறோம்.

இவை தான் கேள்விகள்.எங்கே இப்போது இவற்றுக்கான பதில்களை நீங்கள் உங்களுக்கு எழுதிக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கை என்னவென்று புரிந்து விடும்.என்ன செய்ய வேண்டும் என்பதும் புரிந்து விடும்.


ஒரு விரிவுரை மண்டபத்தில் கேட்கப் பட்ட கேள்விகள் இவை.

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு எழுதி உள்ளீர்கள்?

2. அந்தக் கதைக்குரிய தலைப்பு என்ன?

3. எப்படியான கதை அது?

4.சந்தித்த திருப்பு முனைகள் என்ன? அதனை எப்படிச் சமாளித்தீர்கள்? அதாவது எங்கள் வீர வரலாறு:-)

5.உங்கள் வாழ்வில் நீங்கள் கற்றுக் கொண்ட அனுபவம்/பொன்மொழி என்ன?

Thursday, September 3, 2009

Saturday, August 1, 2009

அக விழி

மகிழ்ச்சிக்கு ஒரு பயிற்சி:-

நம்முடய மனதுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி நமக்குள் நாமே உள் நோக்கிப் பார்த்தல் ஒரு ஆரோக்கியமான செயற்பாடு.தேவையற்ற சிந்தனைகளை களையவும் மனம் அமைதி கொள்ளவும் இப்பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும்.

ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி ஒரு பார்வையாளராக இருந்து உங்கள் மனதுக்குள் எவ்வாறான சிந்தனைகள் ஓடுகின்றன என்று வேடிக்கை பாருங்கள்.மிகவும் சுவாரிஸமாக இருக்கும். நீங்கள் யார் என்பதை அது உங்களுக்கு உணர்த்தும். சரி, பிழைகள் தெரிய வரும்.இது பற்றி யாரோடும் நீங்கள் பேச வேண்டியதில்லை. இது முதன் முதலாக உங்களை நீங்கள் கண்டு கொண்ட நிகழ்வு.நீங்கள் யார் என்பதை அது உங்களுக்குச் சொல்லும்.

அவர் எவ்வாறானவராக இருந்தாலும் பறவாயில்லை.கொஞ்ச நாட்களுக்கு அந்தக் 'குழந்தையைக்' கவனித்து வாருங்கள்.உங்கள் மனம் சஞ்சலப்படுகின்ற பொழுதுகளில்,உணர்வுகளின் வசப் படுகிற பொழுதுகளில் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து உள்நோக்கிப் பார்த்து உங்களைச் சாந்தப் படுத்துங்கள்.உங்கள் குறை நிறைகள் பற்றி அது உங்களோடு பேச ஆரம்பிக்கும். அழும்,பேசும்,விம்மும்,அடி வாங்கிய குழந்தையாய் உங்களோடு கோவித்துக் கொள்ளும்.உங்களுக்கு சரி பிழையை,என்ன அதனுடய தேவை என்பது பற்றி எல்லாம் அது உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கும்.உண்மையில் அது ஒரு திவ்யமான குழந்தை என்பதையும்; அடிப்படையில் அன்பினையே அது வேண்டி நிற்கிறது என்பதையும் நீங்கள் கண்டு கொள்ளக் கூடும்.உங்கள் உணர்வுகளையும் தாண்டி,அது சொல்லுகின்ற தர்மத்துக்குச் செவி கொடுங்கள்.அந்த தர்மத்தின் வழி செல்லுங்கள்.
அது கேட்பதைக் கொடுத்து சினேகிதம் கொள்ளுங்கள்.உற்ற தோழனாய் கூடவே இருங்கள்.

இனி உங்கள் முகத்தில் அந்தக் குழந்தையின் ஒளி மிளிரக் காண்பீர்கள்.

கடவுள் உங்களோடு துணை வருவது தெரியும்.

Saturday, July 18, 2009

கேட்டலைக் கற்றல்

மற்றவரைப் பேச விடுங்கள்.அதில் அவர் பரம திருப்தி அடைவார்.உங்களை மதிப்பார். பிறகு நீங்கள் சொல்வதை அவர் கேட்பார்.

-யாரோ-

Tuesday, May 26, 2009

புத்தரின் கருணை


நாவிதன் என் வீட்டருகே நல் மனிதர் அவர் சென்றார்.
தாவி நான் ஓடினேன்.
ஆனால், அவர் திரும்பி எனக்காகக் காத்து நின்றார்.
பிரபுவே உம்முடன் பேசலாமா?
பேசலாம்.
எம்மைப் போனறவர்களுக்கு 'நிர்வானம்' கிடைக்குமா?
நாவிதனான உனக்கும் கிடைக்கும்.
உங்களை நான் தொடரலாமா?
தொடரலாம்.
நாவிதனான நானும் கூட தொடரலாம் என்றார்.
பிரபுவே, நான் தங்கள் பக்கத்தில் தங்கலாமா?
தங்கலாம்.
ஏழை நாவிதனான நான் கூடத் தங்கலாம் என்றார்.

ஞான தீபம்,சுவாமி விவேகானந்தர். சுடர் 6.

பட உதவி; நன்றி; இணையம்.

Wednesday, April 1, 2009

கதம்ப மலர்கள்

* தன்னை உணர்ந்து கொண்டவன் மற்றவர்களுடன் பேசுவதையும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் தவிர்த்துத் தன்னைப் பார்க்கத் தொடங்க வேண்டும்.தனக்குத் தானே நீதிபதியாகித் தன்னுடய சரி,பிழைகளை அலசி தன்னைப் புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும்.
தன்னோடு பேசித், தன் பிழைகளைத் தட்டிக் கேட்டு, தனக்குத் தானே எஜமானனாக வேண்டும். -யாரோ-

* துக்கமும் சந்தோஷமும் வெளி நிகழ்ச்சிகளில் இல்லை.நீ யார் பேரிலும் கோபிக்காதே! பிறருடய குண தோஷம் நமக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது.
- கிருபாச்சாரியார் தன் மகள் தேவயானிக்குக் கூறியது.-

* உடலைப் பிரிந்த ஆத்மாவுக்கு அண்ணன், தம்பி, பந்துக்கள் என்ற பரஸ்பர சம்பந்தம் ஒன்றுமில்லை.உம்முடய மக்கள் உண்மையில் உமக்குச் சம்பந்தப் பட்டவர்கள் அல்லர்.தேக சம்பந்தம் மரணத்தோடு முடிந்து போகிறது.

* ஆத்மாவோடு கூட வருவது செய்த தர்மம், நல்வினை, தீவினை இவையே.

*அறிவு நிறைந்தவனும், புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாகக் காண்பவனும்,மான அவமானத்தால் மாறுபாடு அடையாமல் இருப்பவனும்,நண்பனையும் எதிரியையும் ஒன்றுபோல் நடத்துபவனும், எல்லாவிதமான பலன் நோக்கு செயல்களையும் துறந்தவனுமான ஒரு மனிதன் இயற்கைக் குணங்களில் இருந்தும் உயர்ந்தவனாவான்.

* மனதால் எல்லா செயல்களையும் துறந்து விடும் போது 9 கதவுகள் கொண்ட நகரில் செய்யாமலும் செயற்காரணமாகாமலும் ஆத்மன் இன்பமாய் வசிக்கிறான்.

* பெரியவர்களை வணங்குவது, தூய்மை, எளிமை,சிற்றின்பத்துறவு, தீங்கு செய்யாது இருத்தல், இவை உடலால் செய்யும் தவமாகும்.

உண்மையாகவும் நன்மையளிக்கும் படியாகவும், மனதை நோகச் செய்யாத முறையிலும் பேசப் படும் பேச்சு வாக்குத் தவமாகும்.

சாந்தம்,எளிமை,கம்பீரம், சுய கட்டுப் பாடு,எண்ணத் தூய்மை இவை மனதின் தவமாகும்.
-பகவத் கீதை-



*

Saturday, March 21, 2009

இலக்கியத்தில் வாழ்க்கைச் செல்வம்

உள்ளம் பெரும் கோயில்:-

"வெண்ணையுற்று நெய்தேட வேண்டுமோ? தீபமுற்று
நண்ணு கனல் தேடல் நன்றாமோ? - என் மனத்தை
நாடிச் சிவன் இருக்க, நாடாமல் ஊர் தோறும்
தேடித் திரிவதென்ன செப்பு?"

இதன் பொருள்;

கையில் வெண்ணை இருக்கும் போது நெய் தேட வேண்டியதில்லை.விளக்கு இருக்கும் போது தீயினைத் தேடுதல் நன்றோ? தன்னை தியானிக்கின்ற மனதில் விரும்பி தங்கச் சிவனிருக்க,அவரை உள்ளத்தில் தேடிக் காணாமல் தலங்கள் தோறும் தேடுவது ஏனென்று சொல்வாயாக!


நல்லோரும் தீயோரும்:-

"நல்லவர்கள் வாயால் நவிலுமொழி பொய்யாமல்,
'இல்லை'யெனாது உள்ளமட்டும் ஈவார்கள் - நல்லகுணம்
அல்லவர்கள் போ,வா என்று சொல்லி நாள் கழித்தே
'இல்லை'என்பார் இப் பாரினிலே"

இதன் பொருள்;

நல்ல இயல்புடயவர்கள் தம்முடய சொற்களை காத்து,இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாது உள்ளவற்றைக் கொடுப்பார்கள்.தீய குணம் உள்ளவர்கள் இரப்பவர்களை போங்கள், வாருங்கள் என்ற சொற்களைக் கூறி, வீணாகக் காலதாமதம் செய்து, கடைசியாக 'இல்லை' என்று சொல்வார்கள்.


நல்லோர் பண்பு:-

"ஞானம்,பெருமை,நயம், கருணை,உண்மை,அபி
மானம்,பொறுமை,வணக்கம்,உயர் - தானமுடன்,
சற்குணம்,ஆ சாரம்,தகுகல்வி,நீதிநெறி
சற்குணருக்கு உண்டு என்றே சாற்று"

இதன் பொருள்;

அறிவு,பெருமை,நேர்மை,இரக்கம்,பற்று,பொறுமை,பணிவு,மேலான ஈகை என்பவற்றோடு நல்ல தன்மை,ஒழுக்கம்,தக்கபடிப்பு,அறநெறிநாட்டம் என்பன நற்குணம் உடையவர்களிடத்து உள்ள நல்ல பண்புகளாகும்.

பாடிய புலவர்:-
அருணாசலக் கவிராயர்.
(கி.பி.1712 - 1779 )

Thursday, January 22, 2009

எது நிரந்தரம்?


சாகப் போகிறவனுக்கு யார் நண்பன்?
தானம்.அது தான் மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிருடன் கூடப் போகும்.

எது சுகம்?
நல்லொழுக்கம்.

எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான்?
ஆசை.

உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?
நாள் தோறும் பிராணிகள் யமன் வீட்டுக்குப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்தும் மிஞ்சியுள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருப்பார்கள் என்று எண்ணுவதே பெரிய ஆச்சரியம்.

எது மனிதனைப் பாதுகாக்கிறது?
செய்த தர்மமே மனிதனைப் பாது காக்கிறது.

- பாரதத்தில் தர்ம தேவதை யக்ஷனாக வந்து தர்மரிடம் கேள்வி கேட்ட போது-

Sunday, January 4, 2009

12 நற் பண்புகள்

அகத் தூய்மை,புறச் சுத்தம்

அன்பு,நல்லெண்ணம்

ஒரே சீரானமனநிலை,அமைதி

பொறுமை,நல்லிணக்கம்

மரியாதை,சுயமரியாதை

ஆக்கபூர்வ நோக்கு, சுய கட்டுப்பாடு

நடுவு நிலை,பற்றற்ற நிலை

உண்மை

எளிமை, திருப்தி

நேர்மை,நீதி

உலக சகோதரத்துவம்.

Thursday, January 1, 2009

கமலம் ஒன்று

நல்லெண்ணம்,சகிப்புத்தன்மை,மன்னித்தல்,மற்றும் அன்பான உபசாரம் ஆகியன அடிப்படையில் அவசியமான விசேட குணங்களாகும்.

நீங்கள் எல்லோராலும் விரும்பப் படுபவர்களாக இருப்பீர்களாக! அப்போது அனைவரின் ஆசிகளுக்கும் உரிமையாளர் ஆகிவிடுவீர்கள்.

உங்கள் பேச்சில் ஒரு போதும் கசப்புணர்வு இருக்கக்கூடாது.உங்கள் பேச்சானது ஆத்மாவுக்கு ஆசுவாசத்தையும்,ஆறுதலையும் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.உங்கள் சொற்கள் ரோஜா இதழ்கள் போன்று உதிர வேண்டும்.உங்கள் வாய் மொழியானது பிறரைக் காயப்படுத்தும் கற்களைப் போன்றதாக இருக்கக் கூடாது.

ஒரு போதும் பழி வாங்கும் எண்ணம் கூடாது.மற்றவர் மீது பழி போடாமல்,குறை காணாமல்,குற்றம் சுமத்தாமல்,தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.

எங்கோ, எப்போதோ பார்த்தது.